முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!

160

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தலைமை பண்பு, தொலைநோக்கு பார்வை, அறிவுத்திறன் கொண்ட தலைவர் வாஜ்பாய் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டியுள்ளார். மிகச்சிறந்த சிந்தனைவாதியாக விளங்கியவர் அடல் பிஹாரி வாஜ்பாய் என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாயின் தொலைநோக்கு பண்பை வழிகாட்டியாய் கொண்டு இயங்குவோம் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பதிவிட்டுள்ளார். தேசத்திற்காக வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் என்றும், தமது துயரத்தை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறேன் எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். இந்தியா தனது சிறந்த மகனை இழந்துவிட்டது என்றும், வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டவர் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த வாஜ்பாயின் மறைவு வேதனை அளிப்பதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பு என்றும், இந்தியாவிற்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர் வாஜ்பாய் எனவும் முதல்வர் பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார். கொள்கையால் மாறுபட்டாலும் அனைவருடன் பழகும் சுபாவம் கொண்டவர் வாஜ்பாய் என திராவிட கழகத் தலைவர் வீரமணி கூறியுள்ளார். வாஜ்பாயின் மறைவுச் செய்திக் கேட்டு அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நாகரிகத்தை போற்றிப் பாதுகாத்த பிதாமகன் வாஜ்பாயின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு பாமக நிறுவனர் ராமதாஸ் வருந்தியுள்ளார்.

வாஜ்பாய் மறைவு இந்திய நாட்டுக்கும், அரசியலுக்கும் மாபெரும் இழப்பு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தமிழகத்துக்கு பல வளர்ச்சித் திட்டங்களை வழங்கியுள்ளார் என திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாடு வளர்ச்சி அடைந்தது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மாறுபட்ட கருத்து கொண்டவர்களிடம் கூட மனம் திறந்து பேசி நட்புப் பாராட்டக் கூடியவர் வாஜ்பாய் என பாஜக எம்பி இல.கணேசன் கூறியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஈழத் தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என பழ.நெடுமாறன் நினைவுக் கூர்ந்துள்ளார். நாட்டின் மிகப்பெரிய தலைவர் வாஜ்பாயின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.