ஈழத்தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ

251

விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் தான் ஈழத்தமிழரை பாதுகாக்க முடியும் என ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழீழத்தில் அனைவரும் உயிருடன் வாழவும், சிறுவர்கள் நிம்மதியாக கல்வி கற்கவும் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்கவேண்டும் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பேசினார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என சிங்கள அமைப்புகள் போர்க்கொடி தூக்கினர். இந்த நிலையில், விஜயகலா மகேஷ்வரன் நேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பெண் அமைச்சர் விஜயகலா பேசியது தான் உண்மை நிலை என்றும், அங்குள்ள ஈழத்தமிழர்களின் எண்ணத்தையும், உணர்வையும் அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ராணுவத்தினரும், போலீசாரும் இளைய தலைமுறையை பாழாக்க மதுவையும், போதைப் பொருளையும் திணிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அவர், இதனால் வடக்கு மாகாணத்தில் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்து விட்டதாகவும் கூறியுள்ளார். தமிழ் ஈழ விடுதலை புலிகளும் மண்ணில் புதைந்த வித்துகள் விருட்சமாவதைப் போல் இன்றைய இளைய தலைமுறையினர் புலிகளாக மாறி எழுந்து வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சுதந்திர தமிழ் ஈழம் மலர்வது வருங்காலத்தின் கட்டாயம் என்றும், வரலாற்றில் எழுதப்படப் போகும் பாடம் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.