மனித நேயம், கருணையுடன் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை தேவை : மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்

416

மனித நேயம், கருணை, மானிடப்பற்று மற்றும் காருண்யம் ஆகியவற்றை உணர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அதிமுக செய்தித்தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 2014ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, 7 பேர் விடுதலை தொடர்பாக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி. அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுனருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியே 7 பேரையும் விடுவிப்பதில் ஆட்சேபணை இல்லை என தெரிவித்துள்ளதை நினைவுகூர்ந்த வைகைச் செல்வன், தற்போது காங்கிரஸ் பல்டி அடித்து, 7 பேர் விடுதலை தொடர்பாக, வித்தியாசமான அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறினார்.

ஆனால், மனிதநேயம், கருணை, மானிடப்பற்று, காருண்யம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 27 வருடங்களை சிறையில் கழித்த 7 தமிழர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தார்மீக கடமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.