வைகையாற்றில் செல்பி எடுக்கும்போது விபரீதம் | சிறுவன் தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழப்பு ..!

932

மதுரை வைகையாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்கச் சென்றபோது, செல்பி எடுத்த சிறுவன் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஆசிரியர் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் ஜெயசூர்யா ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், உறவினர் வீட்டு விசேஷத்திற்காக ராமகிருஷ்ணன் குடும்பத்தோடு மதுரை சென்றுள்ளார். அப்போது, ஜெயசூர்யா மற்றும் உறவினரின் மகன் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீரை வேடிக்கை பார்க்கச் சென்றுள்ளனர். ஆற்றின் கரையில் செல்பி எடுக்கும் போது, இருவரும் தவறி விழுந்துள்ளனர்.

இதில் கோகுல கிருஷ்ணன் சுதாரித்து எழுந்து விட, ஜெயசூர்யா தண்ணீர் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். அருகிலிருந்தவர்கள் தகவல் தெரிவிக்க, தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரமாகப் போராடியும் சிறுவனை மீட்கமுடியாமல் போனது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் ஜெயசூர்யா சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.