வடகிழக்கு பருவமழையால் டெல்லி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது! 25 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!!

296

புதுடெல்லி, ஜூலை,30–
வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்லி மாநகரம் வெள்ளத்தில் மூழ்கிறது. பல இடங்களில் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. தேசிய நெடுஞ்சாலையில் 25 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. இதனால் இந்திய தலைநகரான டெல்லி வெள்ளத்தில் மூழ்கியது. 5 அடி உயரத்துக்கு முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 25 மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் நின்ற இடத்திலேயே மணிக்கணக்கில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அரசு பேருந்து போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் பேருந்துகள் பழுதாகி நின்றன.
வெள்ளம் பெருக்கெடுப்பு
டெல்லியில் முன்பு கூர்கான் என்று அழைக்கப்பட்ட முக்கிய பகுதியான குருக்ராம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பகுதியில் 5 அடிக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேசிய நெடுஞ்சாலை 8–ல் 25 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்களில் இருந்து வந்தவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல முடியாமல் பெரும் அவதிக்கு ஆளானார்கள். டெல்லியின் புறநகர் பகுதியான குருக்ராம் பகுதியில் வெள்ளத்தில் வாகனங்கள் மிதந்தன. கார்கள் பல கி.மீ. தொலைவுக்கு நீண்டு கிடந்தன. எல்லா கார்களும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தன. தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் காரில் சென்ற ராஜஸ்தான் கோட்புட்லி என்ற இடத்தை சேர்ந்த ராம் மாலிக் கூறுகையில், மழை வெள்ளம் காரணமாக இரவு முழுவதும் காருக்குள்ளேயே இருக்க வேண்டியதாயிற்று என்றார்.
போலீஸ் உதவவில்லை
பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் கோரி போலீசுக்கு தகவல் கொடுத்தும் எந்தவொரு போலீசாரும் உதவிக்கு வரவில்லை என்று தனது உறவினரை காசியாபாத்துக்கு சந்திக்க காரில் சென்ற போது போலீசார் உதவ முன்வர வில்லை என்று ஜெய்ப்பூரை சேர்ந்த சமீரா மீனா கூறினார். தண்ணீருக்குள் கார் மூழ்கியதால், கார் இரண்டாக உடைந்தது. இதனால் பல மணி நேரம் எங்களால் அந்த இடத்தை விட்டு அகல முடியவில்லை. எங்களுடன் இருந்த 2 வயது மகள் கதறி அழுததை எங்களால் அடக்க முடியவில்லை என்றார்.
காரில் சிக்கிக் கொண்டதால் தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வர தண்ணீருக்குள் நடந்து செல்ல வேண்டியிருந்தது என்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் கூறினார்கள். இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்று தான் முக்கிய பொருட்களை வாங்க முடிந்தது. காரில் வேறு எங்குமே செல்ல முடியவில்லை என்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.
பள்ளிகள் மூடப்பட்டன
ஹோண்டா சவுக் என்ற இடத்தில் கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மழை காரணமாக மேம்பாலத்தின் கீழ் கழுத்தளவுக்கு வெள்ளம் பாய்ந்தோடியது. மாவட்ட நிர்வாகம் நேற்றும், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு குருக்ராம் துணை கமிஷனர் டி.எல்.சத்தியபிரகாஷ், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குருக்ராமில் ஹீரோ ஹோண்டா சவுக் பகுதியில் சாலைகள் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெர்கம்பூர் பகுதியை சுற்றிலும் பல தொழிற்சாலைகள் இருப்பதால் அந்த தொழிற் சாலையிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகள் வெள்ளத்தில் மிதந்தன. இது தோல் வியாதியை ஏற்படுத்தும் என்று அப்பகுதியை சேர்ந்த சஞ்சீவ் சர்மா கூறினார்.
வெள்ள நெருக்கடி அபாயத்தை போக்க முன்வராத போக்குவரத்து துணை கமிஷனர் பல்பீர் சிங்கை பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். அரசு நிர்வாகத்துக்கும், போலீஸ் நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாததே இந்த நெருக்கடிக்கு காரணம் என்று பொதுமக்கள் குறை கூறினார்கள். குருக்ராம் சாலைகளில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியிலும் இதே நிலை காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக வெள்ள அபாயத்தால் நகர சாலைகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகள், சத்திய நிகேதன், மயூர் விகார், மேம்பாலம் போன்ற இடங்களில் அப்படியே நிற்பதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து சீர் அடையவில்லை.
நேபாளில் 90 பேர் பலி
நேபாளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்திற்கு அங்கு 90 பேர் பலியாகி உள்ளனர். 12 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்புக்குள்ளாகி உள்ளனர். இன்றும் தொடர்ந்து டெல்லி மற்றும் அரியானா போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.