24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

1237

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால், 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கூறினார்.
கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 150 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நீர்மட்டம் 41 அடியை எட்டியுள்ளது.
கடலூரில் சூறைக்காற்று வீசி வருவதால், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி இருப்பதால், ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் கரை திரும்பி வருகின்றனர்.