ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் ஆறாவது நாளாக போராட்டம் | வாடிவாசல் திறக்கும் வரை வீடுகளுக்கு செல்ல மறுப்பு .

155

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினாவில் இளைஞர்கள் பற்ற வைத்த பொறி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியுள்ளது. ஐந்தாவது நாளாக நேற்று இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் குவிய தொடங்கினர். திருவிழாக்கூட்டம் போன்று மெரினா கடற்கரை மனித தலைகளாக காட்சியளித்தது.
விடியவிடிய தொடரும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சைக்கிள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் லட்சக்கணக்கில் ஒன்று கூடினர். அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். பல தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்களும் மெரினா வந்து மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒரே நாளில் பத்து லட்சம் திரண்டதால் காமராஜர் சாலை திக்குமுக்காடியது. இது போன்ற ஒரு மக்கள் புரட்சியை இதுவரை கண்டதில்லை என பொதுமக்களும், போராட்டத்தில் கலந்து கொண்டர்வர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.