சிறையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி..!

247

உத்தரபிரதேசத்தில் சிறை அதிகாரிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்துவிட்டு, கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற கைதி, கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், கொலை வழக்கில் கைதாகி, பைசாபாத் சிறையில் இருந்து வரும் ரவுடி சிவேந்திர சிங், தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிறையில் உள்ள ரவுடி சிவேந்திர சிங், அவரது புகைப்படம் பொருந்திய கேக்கை கத்தியால் வெட்டுகிறார். கேக் வெட்டுவதற்கு முன், மெழுகுவர்த்தியை பிரகாசிக்கச் செய்கிறார், பின்னர் வெட்டிய கேக்கை சக கைதிகளுக்கு கொடுக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் சென்ற சிவேந்திர சிங், செய்தியாளர்களிடம் பேசியபோது, சிறை அதிகாரிகள் தனது பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்ததாகவும், அதற்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கேக், மெழுகுவர்த்தி, கத்தி மற்றும் மொபைல் போன் ஆகியவற்றையும் சிறை அதிகாரிகள் தான் ஏற்பாடு செய்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.