வடமாநிலங்களில் மழைவெள்ளத்தால் மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம். பீகாரில் 149 பேர் உயிரிழப்பு. உத்தரபிரதேசத்தில் எட்டு லட்சம் பேர் பாதிப்பு.

263

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 28 மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காசியாபுர், புலந்தஷாகர், பல்லியா உள்ளிட்ட பகுதகளில் 10 புள்ளி 2 முதல் 12 புள்ளி 4 மில்லி மீட்டர் அளவிலான மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தின் 28 மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநில நிவாரண அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரணாசி, அலகாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 987 கிராமங்களில் எட்டு லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் நேற்று வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளநிலையில், இதுவரை வெள்ளம் காரணமாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கங்கா, யமுனா உள்ளிட்ட ஆறுகளில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளநீர் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வழியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.