உ.பி. முதல்வர் வேட்பாளர்வருண் காந்திக்கு ஆதரவாக சத்ருக்கன் சின்கா மீண்டும் கோஷம்!பா.ஜ.க. தலைவர்கள் அதிருப்தி!!

331

வருண் காந்திக்கு ஆதரவாக சத்ருக்கன் சின்கா மீண்டும் கொடி உயர்த்தி உள்ளார். இதனால் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பா.ஜ.க.வில் தற்போது உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிக விவாதம் நடந்து வருகிறது. அடுத்தாண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் யாரை முதல்வர் வேட்பாளராக ஆக்கலாம் என்று அக்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் சுல்தான்பூர் தொகுதி எம்.பி. வருண்காந்தியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க. இளைஞர் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்திரா காந்தியின் பேரனான வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க. விரும்பவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அம்மாநில பா.ஜ.க.  தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, கோரக்பூர் தொகுதி எம்.பி. யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

இந்நிலையில் முன்னாள் இந்தி நடிகரும், பீகாரின் பாட்னா தொகுதி எம்.பி.யுமான சத்ருக்கன் சின்கா மீண்டும் வருண் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்

இது தொடர்பாக அவர் பாட்னாவில் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக வருண் காந்தியை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்கும். இது எனது தனிப்பட்ட அபிப்ராயம். வருண் காந்தி இளைஞர். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. கட்சி பணியிலும் சிறப்பாக செயல்படுகிறார்.  எனவே அவரை முதல்வராக்குவது தவறில்லை.

இருப்பினும் உ.பி.யில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் பாராளுமன்ற குழுவே முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்ருக்கன் சின்கா தொடர்ந்து பா.ஜ.க.விற்கு தலைவலியாக இருந்து வருகிறார். அவர் தெரிவிக்கும் கருத்துக்களால் பலமுறை சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. தற்போது வருண் காந்திக்கு ஆதரவாக தொடர்ந்து பேட்டியளித்து வருகிறார். இதனால் மேலிட தலைவர்கள் கோபம் அடைந்துள்ளனர்.