பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் மீண்டும் பதற்றம்

217

தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டு அசாதாரண சூழல் நீடிக்கும் நிலையில், முத்தம்மாள் காலனி பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். சிகிச்சை பெற்று வந்தவரில் செல்வசேகர் என்பவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. கலவரம் பரவ விடாமல் தடுக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது. பலியானவர்களின் உடல்கள் வைக்கப்படுள் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை பரவாமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாதாண சூழல் நீடிக்கும் நிலையில், அண்ணா நகர் பகுதியில் போலீஸ் தடுப்புகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். முத்தம்மாள் காலனி பகுதியில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால், மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.