தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை..!

166

குற்றம்செய்யாதவரை தண்டிக்கக்கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுரை வழங்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவனை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையில், போலீசாரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இன்று ஆஜராக உத்தரவிட்டனர்.

இதன்படி இன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆஜரானார். போராட்டத்தின் போது போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்தும் அவர் விளக்கமளித்தார். இதனை கேட்ட நீதிபதி குற்றம் செய்யாதவரை தண்டிக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.