மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் வகையில், வீட்டு உபயோகப்பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடி மக்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர்களின் அனைத்து கூட்டமைப்பு சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிட, நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பாய், தலையணை விரிப்பு, உணவுப்பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி உட்பட சுமார் பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எஸ்.எஸ். கிருஷ்ணா என்ற சரக்கு பெட்டக கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் இந்த நிகழ்வை, ஸ்கேனிங் சென்டரில் இருந்து சுங்கத்துறை ஆணையர் திவாகர் தொடக்கி வைத்தார்.

இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் சார்பில், கேரள மக்களுக்கு உதவும் நோக்கில், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், போர்வை, மருந்து, குழந்தைகள் பால் பவுடர் மற்றும் பெண்களுக்கான நாப்கின் ஆகியவை நேரடியாக லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.