சென்னை வந்த டி.டி.வி. தினகரனுக்கு விமான நிலையத்தில் அதிமுக அம்மா அணி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

349

சென்னை வந்த டி.டி.வி. தினகரனுக்கு விமான நிலையத்தில் அதிமுக அம்மா அணி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி. தினகரன் டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழக அரசை மறைமுகமாக மத்திய அரசு இயக்குவதாக வெளியான தகவலை மறுத்தார். கட்சி பணிகளில் மீண்டும் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறிய அவர், அதிமுகவிலிருந்து தம்மை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளரை தவிர, வேறு யாருக்கும் கிடையாது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து விமானம் மூலமாக இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தினகரன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அப்போது தொண்டர்களும், நிர்வாகிகளும் மலர் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விமான நிலையத்தில், தொண்டர்கள் கூட்டத்தால் தினகரன் கார் வெளியே வருவதற்கு சிரமம் ஏற்பட்டது. போலீசாரும், நிர்வாகிகளும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி தினகரனை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டை சென்றைடைந்த தினகரனை, அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் ஆடியும், பாடியும் உற்சாக கோஷமிட்டபடி அவரை வரவேற்றனர்.