இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனின் பெயர் விரைவில் சேர்க்கப்படும் : டெல்லி காவல்துறை

262

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரனின் பெயர் விரைவில் சேர்க்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் தொடர்பாக அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நாற்பது நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினர் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கையில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் ஹவாலா தரகர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. தினகரனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் குற்றப்பத்திரிக்கையில் அவர் பெயர் இல்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து, வழக்கிலிருந்து தினகரன் விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவலை மறுத்த டெல்லி காவல்துறை இணை ஆணையர் பிரவீன் ரஞ்சன் இந்த வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார். தினகரனின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இல்லாததால் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக அர்த்தம் கிடையாது என்றும் பிரவீன் ரஞ்சன் விளக்கம் அளித்தார்.