147 இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை …!

600

திருவாரூர் மன்னார்குடி சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இன்றும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோன்று திவாகரனின் கார் டிரைவர் வினோத் வீட்டிலும் சோதனை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

கொடநாடு எஸ்டேட் சீல் வைக்கப்பட்டு, 2-வது நாளாக சோதனை நீடிக்கிறது. எஸ்டேட் மேலாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூரில் உள்ள தினகரனின் ஆதரவாளரும், ஜோதிடருமான சந்திரசேகர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்லில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் மற்றும் அவரிடம் பணியாற்றிய பாண்டியனின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவனின் வீடு, டாக்டர் வெங்கடேசின் நண்பர் ராஜேஸ்வரன் ஆகியோர் வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கர்சன் பகுதியில் உள்ள க்ரீன் டீ எஸ்டேட், வழக்கறிஞர் செந்திலின் நண்பர் பால சுப்ரமணியனின் வீடு, டிஎம்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஏ.வி.வேலுவின் வீடு உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது தவிர புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடை, ஆரோவில் அருகில் உள்ள தினகரனின் பண்ணை வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக முழுவதும் 147 இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.