இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது

172

இந்திய பெருங்கடலை சுற்றியுள்ள இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பின் இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தடுப்பு அமைப்பு சார்பில், இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கடற்கரை பகுதிகளில், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த, ஆபரேஷன் ஐ.ஓ.அலைகள் – 16, என பெயரிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை நிகழ்வு இன்று காலை தொடங்கியது. இதற்காக, சுமத்திரா, இந்தோனேஷியா பகுதியில் 9 புள்ளி 2 ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக உருவகப்படுத்தப்பட்டு, பின்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்த ஒத்திகையின்போது, இந்தியப்பெருங் கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் 35 ஆயிரம் மக்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை ஒத்திகை, அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, குஜராத், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள கடலோர பகுதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுனாமி கண்டறிதல் மற்றும் முன்அறிவிப்பு, அதனால் ஏற்படும் இழப்பு, எச்சரிக்கை முறைகள் உள்ளிட்டவை இந்த ஒத்திகை சோதனைகளில் மேற்கொள்ளப்படும் என யுனெஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.