பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் திருப்பதி..!

376

தேவஸ்தான நிர்வாகத்தின் கெடுபிடியால் ,பக்தர்கள் இல்லாமல் திருப்பதி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16-ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக 28 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. கும்பாபிஷேக விழாவையொட்டி, இலவச தரிசனம், விஐபி, விவிஐபி தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம் உட்பட அனைத்து வகை தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து நேற்று தொடங்கி 16-ஆம் தேதி வரை தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் மட்டும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தேவஸ்தானத்தின் இந்த கெடுபிடி காரணமாக பக்தர்கள் வருகை அடியோடு குறைந்ததால் திருமலையில் மாடவீதிகள், வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் காலியாக காட்சி அளிக்கின்றன. திருமலை பாலாஜி பஸ் நிலையமும், திருப்பதி தேவஸ்தான பாலாஜி பஸ் நிலையமும், திருப்பதி பஸ் நிலையமும் வெளியூர் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே, நேற்று ஒரு கோடியே, 54 லட்ச ரூபுாய் உண்டியல் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.