ரஷியா – அமெரிக்கா அதிபர்கள் இன்று சந்திப்பு..!

319

உலக அளவில் பெறும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள ரஷியா – அமெரிக்கா அதிபர்கள் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் பின்லாந்தில் நடைபெறுகிறது.

அமெரிக்க அதிபராக பதிவியேற்ற பிறகு டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியதில்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடைபெற்ற பொருளாதார மாநாடுகளில் இருதலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் மட்டுமே சந்தித்தனர். இந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டன. இதன் விளைவாக பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சின்கி நகரில் இன்று, டிரம்பும், புதினும் முதலில் தனிப்பட்ட முறையிலும், பின்னர் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பின்னர் டிரம்பும், புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கவிருப்பதை அடுத்து, பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கி ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இருதலைவர்கள் சந்திப்பின்போது, உலகளாவிய விவகாரங்கள், இருநாடுகளிடையே உள்ள பிரச்சினைகள், அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.