ட்ரோன் விமானங்கள் இயக்கம் புதிய விதிமுறைகள் – மத்திய விமான போக்குவரத்துத் துறை

122

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ட்ரோன்களுக்கு வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண், விமானத்தில் ஒட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் இயக்குபவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. நேனோ ட்ரோன்களைத் தவிர மற்றவற்றைப் பறக்க வைக்க விமான போக்குவரத்துத் துறையின் முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ள மத்திய விமானப் போக்குவரத்துத்துறை, 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களைப் பறக்கச் செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணி நேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

சிவில் விமான போக்குவரத்து விதிகள்படி பயிற்சி பெற்றவருக்கு ட்ரோன்களை இயக்க, 5 ஆண்டுகளுக்கு செல்லும் வகையில் அனுமதி தரப்படும் எனவும், நாடாளுமன்றம், தலைமை செயலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.