திருச்சியில் 5 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நூறு சதவீத பாதுகாப்புடன் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள சூரியரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்படும், தடுப்பு வேலி, விழா மேடை, கேளரி உள்ளிட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது என்றார்.

சூரியூரில் 16-ம் தேதியும், ஆவாரங்காட்டில் 17-ம் தேதியும், 18-ல் பெத்தமேடு மற்றும் அணைகட்டு பகுதிகளிலும், கருங்குளத்தில் 27-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவதாக ஆட்சியர் ராசமணி குறிப்பிட்டார். இதேபோல், பிப்ரவரி மாதத்தில் 6 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மனு வந்துள்ளதாக கூறிய அவர், இந்த ஆண்டும் தமிழக அரசு மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நூறு சதவீத பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என கூறினார்.