ரூ.1 கோடி கேட்டு கத்தி முனையில் வி.சி.க. பிரமுகர் கடத்தல் | மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

200

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை காரில் கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் அழகர்சாமி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர், தம்பி ரமேஷ்குமாருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மன்னார்புரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து அழகர்சாமி தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அழகர்சாமியை வழிமறித்து, கத்தி முனையில் காரில் கடத்தி சென்றனர். அவர் அணிந்திருந்த 18 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணத்தையும் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துக்கொண்டனர்.

மேலும், ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் எனவும், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அழகர்சாமி 40 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டதை அடுத்து, மர்ம கும்பர் அவரை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இறக்கிவிட்டு சென்றனர். தகவல் அறிந்து வந்த அழகர்சாமியின் தம்பி ரமேஷ்குமார், அவரை மீட்டு, கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.