காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.16 லட்சம் கடனுதவி! அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்!!

274

திருச்சி, ஜூலை. 23–
காய்கறிகள் சாகுபடி செய்ய முதன் முதலாக 97 விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.16 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி கலையரங்கம் திருமணமண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் முதன்முதலாக 97 நபர்களுக்கு காய்கறிகள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ரூ.16 லட்சம் கடனுதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் விழாவில் பங்கேற்று சிறப்பு கையேடுகளை வெளியிட்டனர்.
கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவிகள் மற்றும் இடுபொருள்களை விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

மானியம்:

விவசாயிகளின் வருவாயை பெருக்கும் பொருட்டு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 50,94,636 விவசாயிகளுக்கு ரூ.23,214.24 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த ஆண்டு 42995 விவசாயிகளுக்கு ரூ.234.23 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 21727 நபர்களுக்கு 133.28 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு 7830 நபர்களுக்கு ரூ.127.46 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1196 நியாய விலைக்கடைகள் உள்ளன. இக்கடைகளில் அனைத்து வியாபார நடவடிக்கைகளும், காகிதம் இல்ல வகையில் விற்பனை முனைய இயந்திரம் மூலம் கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கைபேசி மூலம் பொருட்கள் விற்பனை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படுவதால் பொதுமக்களிடம் இத்திட்டம் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு மாநில அளவில் திருச்சி மாவட்ட மாநில நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையரால் வெள்ளிப் பட்டயம் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் மகத்தான திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை, 1.85 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத்துறை சார்ந்த 32,514 நியாய விலைக்கடைகள் மேற்கொண்டு வருகின்றன மேற்கண்டவாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :
கூட்டுறவு சங்கங்களின் சொத்துக்கள் பாதுகாப்பு, பராமரிப்பு, காப்பீடு வழிகாட்டி தொடர்பான கையேடுகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டு பேசியதாவது:–
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமரர் 350 கோடியை வட்டி மானியமாக விவசாயிகளுக்கு கடன் வழங்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகிறது. மேலும், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களான உரம் மற்றும் இயற்கை உரங்களையும் கிராமப் புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலங்களுக்கு அருகிலேயே தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் வழங்கி வருகின்றன.
வழிகாட்டி

கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் விளைப் பொருட்களை கட்டாய விற்பனை மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தவிர்த்து, விளை பொருட்கள், விலை உயரும் பொழுது விற்பனை செய்வதற்கு ஏதுவாக தானிய கிட்டங்கிகளை தமிழ்நாடு அரசு ரூ.500.00 கோடி அளவிற்கு மானியம் வழங்கி தமிழகம் முழுவதும் தானிய கிட்டங்குகள் கட்டப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
அமைச்சர் சீ. வளர்மதி பண்ணை பசுமை நுகர்வோர் கடை பணியாளர்களுக்கு வழிகாட்டி கையேடுகளை வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வெளியிட்டு பேசியதாவது:–
மாவட்டத்தில் 1196 நியாயவிலைக்கடைகள் செயல்படுகின்றன. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் அரிசிக்கு விலை இல்லாமலும், மற்ற அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும் கிராமப்புற மற்றும் அதிக தொலைவில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பகுதிநேர கடைகள் திறந்து, அவர்களுக்கு பொது விநியோகத்திட்டம் மூலமாக சேவை செய்யப்படுகிறது மேற்கண்டவாறு அமைச்சர் பேசினார்.
சேவை

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர் (மணப்பாறை), என்.செல்வராஜ் (முசிறி), பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர்.பழனிசாமி மாநகராட்சி மேயர்.அ.ஜெயா, துணை மேயர் ஜெ.சீனிவாசன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் மு, மண்டல குழுத்தலைவர்கள் லதா (ஸ்ரீரங்கம்), ஞானசேகரன் (கோ.அபிஷேகபுரம்), மணிகண்டம் ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.பி.முத்துகருப்பன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.