கர்நாடகாவில் பயின்றுவந்த, கேரள நர்சிங் மாணவியை ராக்கிங் செய்த சீனியர் மாணவிகள், டாய்லெட் கிளீனரை குடிக்கச் செய்ததால், அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

258

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான அஸ்வதி, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் உள்ள அல்-கமார் நர்சிங் கல்லூரில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தங்கி இருந்த அல்-கமார் ஹாஸ்டலில் கடந்த மே மாதம் 9-ஆம் தேதி சீனியர் மாணவிகள் அவரை கட்டாயப்படுத்தி டாய்லட் கிளீனரை குடிக்கச் செய்துள்ளனர். இதனால் அஸ்வதிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று 5 நாட்களுக்கு பிறகு அஸ்வதியின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

டாய்லட் கிளீனரை குடித்ததால், உணவுக்குழாயின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை நடத்த வேண்டும் என்றும், அவர் சிகிச்சை பெற்றுவரும் கோழிக்கோடு மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அஸ்வதி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கேரளா கிராம வங்கியில் கல்விக் கடன் பெற்று நர்சிங் கல்லூரில் சேர்ந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ராக்கிங் செய்த மாணவிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன், மற்றும் பெங்களூர் டிஜிபி ஆகியோரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.