கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு | வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி

348

தமிழகத்தில் பெய்த கனமழையால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி, மேடுப்பள்ளி, கொள்ளப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால், பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மாணிக்கபுரம், அம்மாபாளையம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளை விட்ட வெளியே வரமுடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர். அவர்களை மீட்ட வருவாய்துறை அதிகாரிகள், உணவு, உடை, சமையல் பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.

அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால், நல்லாற்றில் திடீரென வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால், கரையோரப் பகுதியில் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கின. பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டு, திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மீட்பு பணியில் தீயணைப்புத் துறையினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.