தமிழக வாலிபர் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல் எதிரொலி. சீர்காழி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடக வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு.

331

சீர்காழி அருகே கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தை சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்த தமிழக வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு வாட் அப்பில் பரவி வருகிறது. இந்த நிலையில், தமிழக வாலிபர் மீதான தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை அடுத்து, மாநிலத்தில் உள்ள கன்னடர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனம் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சீர்காழி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தையும் மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுதொடர்பாக, சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கர்நாடக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் கர்நாடக உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு்ள்ளது.