தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடர்கள் வெறியாட்டம்…. கர்நாடகாவில் ஒன்பதாம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு

309

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால், பதற்றம் நிலவுகிறது. மேலும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கர்நாடக விவசாயிகளும், பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து, மாண்டியா, மைசூர், சாம்ராஜ்பேட்டை, உப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் சாலை மறியல் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெங்களூர்-மைசூர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால் கர்நாடகா முழுவதும் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இதனிடையே, காவிரியில் தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.