தமிழகத்தில் முதன்முறையாக குடியரசு தின விழாவில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

182

நாட்டின் 68-வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிர்நீத்த முப்படை வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முப்படை வீரர்கள் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைதொடர்ந்து, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுவதற்காக வந்த முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
உயிர் நீத்த முப்படை வீரர்களுக்கு முதல்வர் பன்னீர் செல்வம் மரியாதை
பின்னர், எட்டு மணியளவில் தேசியக்கொடியை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஏற்றிவைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்தியாவில் பொதுவாக குடியரசு தின விழாவில் ஆளுநரே தேசியக்கொடி ஏற்றி வைப்பது வழக்கம். ஆனால், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தேசியக்கொடியை ஏற்றியதால், முதன்முறையாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேசியக்கொடி ஏற்றினார்.

இதனைதொடர்ந்து, பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கரகாட்டம், காவடி ஆட்டம், மணிக்கொம்பு ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.