தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி..!

191

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி சென்னை அண்ணா சாலை, கே.கே.நகர், விருகம்பாக்கம், அசோக்நகர், அண்ணாநகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதே போன்று, சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி போன்ற பகுதிகளில் கன கொட்டித் தீர்த்தது. இதனால், மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் தடுப்பணை கட்டும் பணிகள் பாதிப்படைந்தன. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், கோகனூர், எருமபட்டி, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் மாவட்டம், திட்டகுடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் பெய்த மழையால் 80 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால், மூன்று வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இதே போல, ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பாண்டிச்சேரி, திருச்சி, திருவாரூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.