தமிழகத்தில் மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஏன் தனிப்பிரிவு அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் சாலையோர குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர், தமிழகத்தில் கடத்தப்படும் குழந்தைகள் விலங்குகள் போல் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
ஆட்கடத்தல் தடுப்பு பிரிவில் உட்பிரிவு ஒன்றை ஏற்படுத்துவதாக காவல்துறையினர் கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், மாயமான குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஏன் தனிப்பிரிவு அமைக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதா என்று அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.