காணும் பொங்கலையொட்டி, சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம். உறவினர்களுடன் ஆடிப்பாடி உற்சாகம், கோவில்களில் சுவாமி தரிசனம்.

218

காணும் பொங்கலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கோயில்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று கொண்டாடினர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள கொடிவேரி அணையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேளம், தாளங்கள் முழுங்க அவர்கள் நடனமாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தேனி மாவட்டம் கம்பம் சுருளி அருவியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுருளி அருவியில் குளிக்க கூட்டம், கூட்டமாக பொதுமக்கள் திரண்டனர். இதனையொட்டி, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோன்று, வேலூர் மாவட்டம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். மேலும், பெரியார் பூங்கா, அரியூர் நாராயணி கோயில், ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
இதேபோன்று, காணும் பொங்கலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணையிலும், பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனையொட்டி பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் படகுகள் இயக்கப்பட்டன.