தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

239

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் எனவும் கூறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்துநிலையம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் தமிழர்கள் மீது அடக்குமுறையை கையாள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஊர்வலமாக வந்தனர். அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள வ.உ.சி. மைதானத்தில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டடது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நெல்லை வ.உ.சி. மைதானத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே இளைஞர்கள், மாணவர்கள் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரியும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.