தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித் துறை, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதம்..!

141

தமிழக சட்டப்பேரவையில் இன்று, பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்கு தமிழக சட்டசபை நேற்று மீண்டும் கூடியது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்.எல்.ஏ-கள் சண்முகநாதன், தமிமூன் அன்சாரி, தினகரன் ஆகியோர் கொண்டு வந்தனர். இதனையடுத்து, தூத்துக்குடி சம்பவம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு தி.மு.க. தான் காரணம் என்றார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று அவர் தெரிவித்தார்.

அப்போது முதல்வரின் அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இல்லை என குற்றம்சாட்டிய ஸ்டாலின், 13 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சரமாரி கேள்விகளை எழுப்பிய திமுக வினர் கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணித்து விட்டு அவையில் இருந்து வெளியேறினர்.முதல் நாளான நேற்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தகவல் தொழில் நுட்ப துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது