திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கிரிவல தரிசன வருகை அதிகரிப்பால் உண்டியலில் சுமார் 94 லட்சம் ரூபாய் காணிக்கை

297

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் கிரிவல தரிசனத்தை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரிப்பால் உண்டியலில் சுமார் 94 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலாகும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியை முன்னிட்டு, பல மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலத்திற்காக வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி ஆனி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு சுமார் 10 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வந்திருந்தனர். அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை செலுத்தினர். கோயிலின் திருக்கல்யாண மண்டபத்தில் 120 பேர் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 94 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணமும், 221 கிராம் தங்கமும், ஐந்தாயிரத்து 890 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால், உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.