மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை..!

270

திருவண்ணாமலையில் வேளாண் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த 3 பேராசிரியர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் கோவை வேளாண் பல்கலைக்கழக விசாரணைக் குழு 9 மணிநேரமாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளது.

திருவண்ணாமலை வாழவச்சனூர் பகுதியில் செயல்படும் அரசு வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி புகார் அளித்ததை அடுத்து, 3 பேராசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மாவட்ட நீதிபதி உத்தரவின்பேரில், காவல்துறையினர், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்பி அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் வனிதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, முனைவர் சாந்தி தலைமையில், உதவி பேராசிரியர்கள் 6 பேர் கொண்ட குழு இந்த விசாரணையை மேற்கொண்டது. பாலியல் புகாருக்குள்ளான பேராசிரியர்கள் தங்க பாண்டியன், உதவி பேராசிரியர்கள் புனிதா, மைதிலி மற்றும் விடுதியில் பணிபுரிபவர்கள், கல்லூரி மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 9 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, கல்லூரி வாயில் கதவுகள் அடைக்கப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இந்த விசாரணை முழுவதும் வீடியோ செய்யப்பட்டுள்ளதாக கூறிய குழுவின் தலைவர் சாந்தி, விசாரணை 3 மாத காலத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவித்தார். மேலும், விசாரணை தொடர்பான அறிக்கை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.