திருவள்ளூர் அருகே சவுக்கு தோப்பில் வாலிபர் எரித்துக் கொலை! சென்னையை சேர்ந்தவரா?

266

திருவள்ளூர், ஆக. 2–
திருவள்ளூர் அருகே தனியாருக்கு சொந்தமான சவுக்கு தோப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வாலிபர் சென்னையை சேர்ந்தவராக இருக்கலாமா என தனிப்படை போலீசார் கருதுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் குன்றத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு வெள்ளவேடு காவல்நிலைய எல்லை பகுதியில் வீசி சென்ற சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மணவளா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் நேற்று மாலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்து அடையாளம் தெரியாமல் இருக்க பாதி எரிந்த நிலையில் உடலை போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என்பது குறித்தும் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் ௩ தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருவள்ளூர், சென்னை, காஞ்சி, வேலூர் மாவட்டங்களில் காணாமல் போனோர் பட்டியல் சேகரிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.
இதில் முதல் கட்ட விசாரணையில் இறங்கிய தனிப்படையினர் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் வடசென்னையை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் காதல் விவகாரமா அல்லது கள்ளத்தொடர்பு காரணமாக வாலிபரை காரில் கடத்தி வந்து ஆள் நடமாட்டம் இல்லாத போளிவாக்கம் சவுக்குத் தோப்பில் கழுத்தை நெரித்து கொலை செய்து, அடையாளம் தெரியாமல் இருக்க டீசல் சிறிதளவு ஊற்றி எரித்துவிட்டு மர்ம கும்பல் தப்பியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இன்று மாலைக்குள் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்பதும் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிய வந்துள்ளது.