திருப்பதியில் 20 தமிழர்கள் படுகொலை ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்தும்! ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் கோரிக்கை!!

298

திருப்பதியில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை ஐநா வில் பேசியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அவர் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக, ஆந்திர அரசின் மீது 20 தமிழர் படுகொலைக்கு நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாதிய ஆணவ கவுரவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:–

தமிழர்கள் கொலை
தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், ஷேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திரகாவல்துறை, வனத்துறை மற்றும் சிறப்புபடை ஆகியவற்றால் படுகொலை செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மும்பை உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.சுரேஷ் தலைமையில் செயல்பட்ட உண்மை கண்டறியும் குழு தமிழர் படுகொலையில் மேற்கூறப்பட்ட மூன்று அரசாங்க நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியது. இதே கருத்தை தேசிய மனித உரிமை ஆணையமும் கூறியது.

கொல்லப்பட்ட தமிழர்களின் உடலின் கழுத்து மற்றும் மேற்பகுதியில் குண்டடி பட்டுள்ளது. அவர்கள் அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லபட்டதைக் காட்டுகின்றது. கொல்லப்பட்டவர்களின் உடலில் அவர்கள் கைகள் கட்டப்பட்டதற்கான தடங்கள் உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளாக பல தமிழ் தொழிலாளர்கள் காணாமல் போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்கு பணிபுரியும் சூழலில் தமிழர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு காணமலடிக்கவும் கொலையும் செய்யப்படுகின்றனர்.
இந்திய அரசை வலியுறுத்தல்
அந்திர அரசின் புலனாய்வு குழு இந்த படுகொலைக்கும் அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்த பின்பும் இந்திய அரசாங்கம் நடுநிலையான ஒரு விசாரணையை தொடங்க தயாராக இல்லை. நீதி வழங்க யாருக்கும் அக்கறை இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகின்றது.

ஆந்திர மாநில அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க தகுந்த அதிகாரிகளை நியமிக்கவும் சாதி ஆவண கவுரவக் கொலைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்த மன்றத்தைக் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.