திருமுருகன் காந்தி வேலூர் சிறைக்கு மாற்றம்..!

439

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன்காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினார். இதன் அடிப்படையில் சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் திருமுருகன்காந்தி, தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதாக இரு வழக்குகளை பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து திருமுருகன்காந்தியை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அனுமதியளித்ததை அடுத்து போலீஸார் திருமுருகன் காந்தியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே ராயப்பேட்டையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அனுமதியின்றி பேரணி நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதாக போலீஸார் அறிவித்தனர்.

இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தற்போது வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.