திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் 3 பேரிடம் இருந்து 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த மகரூப் மற்றும் அமீன் ஆகியோர் குளிர்சாத இயந்திரத்தின் சார்ஜரில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அப்துல் சமாத் என்பவர் கடத்தி வந்த 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி விமான நிலையத்தில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.