முக்கொம்பு கொள்ளிடம் சீரமைப்புப் பணிகளை முதலமைச்சர் பழனிச்சாமி நேரில் ஆய்வு..!

303

திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் பழுதடைந்த மேலணையின் இருபுறமும் புதிய கதவணைகள் கட்டப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார்.

காவிரி ஆற்றில் அமைந்துள்ள 182 ஆண்டு பழமையான திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மொத்தம் 45 மதகுகள் உள்ளன. இதில் 9 மதகுகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனையடுத்து அணையில் இருந்து உடனடியாக அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டது. பாலம் இடிந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, மேலணையின் உடைப்பு பகுதிகளில், சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மதகு உடைந்த பகுதிகளில் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், கொள்ளிடம் மேலணையின் உடைந்த பகுதிகளை முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் பழனிச்சாமி கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, காமராஜ், வளர்மதி மற்றும் வைத்திலிங்கம் எம்பி, மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து, முக்கொம்பில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார். மேலணையில் தடுப்பு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, 325 கோடி ரூபாய் மற்றும் 85 கோடி ரூபாய் செலவில் பழுதடைந்த மேலணையின் இருபுறமும் 100 மீட்டர் தள்ளி, புதிய கதவணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார். புதிய கதவணைகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கி, 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார். ஆற்றில் மணல் அள்ளுவது படிப்படியாக குறைக்கப்பட்டு, பொதுமக்கள் எம்.சேண்ட் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.