திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் வைக்கப்பட்ட 12 சிலைகளில் 4 சிலைகள் மாயம்..!

172

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 4 ஐம்பொன் சிலைகள் மாயமானதால் விழாக் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்புக் குழுவினர் சிலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் அடுத்த விளமல் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பதஞ்சலி மனோகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 1976ஆம் ஆண்டு பதிவேட்டில் 12 ஐம்பொன் சிலைகள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயம் பழமையான கோவிலாக உள்ளதால் பாதுகாப்பு கருதி 12 ஐம்பொன் சிலைகளும் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே 1984ஆம் ஆண்டு தியாகராஜர் ஆலய வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு சிலைகள் மாற்றப்பட்டன. 1986ஆம் ஆண்டு சிலைகள் பதிவேட்டிலும் இந்த 12 சிலைகள் குறித்த தகவல்கள் உள்ளன. இந்நிலையில் விளமல் பதஞ்சலி மனோகர் ஆலயத்திற்கு பக்தர்களின் உபயத்தால் வருகின்ற 12ஆம் தேதி குடமுழக்கு நடைபெறவுள்ளது.

எனவே விழாக் குழுவினர் கோவிலுக்கு சொந்தமான 12 ஐம்பொன் சிலைகளை கேட்டுள்ளனர். சிலைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் 8 சிலைகள் மட்டுமே உள்ளதாக கொடுத்துள்ளனர். சந்திரசேகர், அம்பாள், பிரதோஷ நாயனார், சண்டிகேஷ்வரர் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் இல்லை என தெரிவித்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாயமான ஐம்பொன் சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை மீட்புக் குழுவினர் மீட்டு ஒப்படைக்க வேண்டுமென்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.