கூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..!

314

திருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி, சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் கலந்து கொள்ள சென்னை, கோயம்புத்தூர், புதுச்சேரி, மற்றும் மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், முன்னூறுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வருகை தந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்வு, கூத்தாண்டவர் முன்னிலையில் இன்று நடை பெற்றது. கோவில் பூசாரிகள் கைகளால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், அரவானை கணவனாக நினைத்து ஆடிப்பாடி, கும்மியடித்தது மகிழ்ந்தனர்.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்விழாவை காண அருணாபுரம், ஒட்டம்பட்டு, வீரபாண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர்.