திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார விழா, கோலகலமாக நடைபெற்றது…!

632

முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் ஜெயந்திநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை காண லட்சக் கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர். சக்திவேலுடன் சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்பட்ட ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளினார்.
Tiruchendur_SOORASAMHARAM_
சிவன் கோயிலில் இருந்து சூரபத்மன் தன் படையுடன் கடற்கரைக்கு வந்தான். கஜமுகா சூரன், சிங்கமுகா சூரன், சூரபதுமனை எதிர்கொண்ட ஜெயந்திநாதர் அவர்களுடன் போரிட்டார். தாய் பார்வதி அளித்த சக்தி வேலை கொண்டு சூரர்களை ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
சேவலாகவும், மாமரமாகவும் மாறி போரிட்ட சூரபத்மனை வெற்றிக் கொண்ட ஆறுமுகப் பெருமான் அவனை ஆட்கொண்டார். இந்தக் காட்சியை கண்ட பக்தர்கள் அரோகரா என்ற கோஷத்துடன் ஜெயந்திநாதரை வழிபட்டனர்.
சூரசம்ஹாரம் நிறைவு பெற்ற உடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவை ஒட்டி திருச்செந்தூரில் லட்சக் கணக்கானோர் குவிந்ததால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.