ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை !

243

ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதை அடுத்து இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஆகியவற்றை வழங்கியதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை நேற்றையதினம் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இதையடுத்து டெல்லி சென்ற விக்ரம் பத்ரா வருமான வரித்துறை வழங்கிய அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார். அதை தொடர்ந்து டெல்லியில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி, இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான 29 பக்க விளக்க அறிக்கையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.