தேனி, கரூர் மாவட்டங்களில் திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

455

தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான பெரியகுளம், தேவதானப்பட்டி, ஜெயமங்களம், வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. வெயிலால் தவித்து வந்த அப்பகுதி மக்கள் எதிர்பாராதவிதமாக பெய்த இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர்.
அதே போல, கரூர், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், குளித்தலை, மாயனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரம் விடாமல் கொட்டித்தீர்த்த இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் இடைவிடாது பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அமராவதி ஆற்றில் 3 மாதமாக தண்ணீரின்றி அவதிப்பட்டுவந்த விவசாயிகள் தற்போது பெய்துள்ள மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.