திண்டுக்கல், தேனியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

245

திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளவேடு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி திண்டுக்கல் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. முதலில் ஊர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக வாடி வாசல் வழியாக துள்ளி குதித்து வெளியேறின. சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, வெள்ளிக்காசு, ஆட்டுக்குட்டி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

அய்யம்பட்டியில் துவங்கிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, காளைகளை அடக்கினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி வல்லரடி கார சுவாமி கோயில் ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக துவங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் போட்டிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரரகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.