மாமனார் வீட்டில் கொள்ளையடித்த மருமகன் கைது..!

177

புதுச்சேரி அடுத்துள்ள காரைக்காலில் ஆள்வைத்து மாமனார் வீட்டிலேயே கொள்ளையடித்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலை சேர்ந்த ராமநாதன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர், தனது மறைந்த நண்பர் ஆனந்தன் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இரண்டுதினங்களுக்குமுன் நண்பரின் வீட்டுக்குச் சென்ற ராமநாதன் அங்கிருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்மக்கும்பல் ராமநாதனை அறைக்குள் தள்ளிவிட்டு அவரிடமிருந்த வைரமோதிரம், செயின் உள்ளிட்ட நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராமநாதனிடம் கொள்ளையடித்தவர்கள் அவரது நண்பரின் மருமகன் தினேஷ் என்பவரும் அவரது கூட்டாளிகளும் எனத் தெரியவந்தது. மேலும் மாமனார் வீட்டுக்கு அடிக்கடி வரும் ராமநாதனிடம் தினேஷ் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் வெளியானது. இச்சம்பவம் தொடர்பாக தினேஷும், அவரது நண்பர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மேலும் மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதேபோல், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கிரிஜா என்பவர் தனது மகனுடன் தனியாக வசித்துவருகிறார். நேற்றுமுன் தினம் இரவுப்பணிக்கு மகன் சென்றுவிட்டதால், கிரிஜா வீட்டைப் பூட்டை விட்டு தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை வீட்டுக்குவந்து பார்த்த கிரிஜா, கதவின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மர்ம நபர்கள் அள்ளிச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில், சிலதினங்களுக்குமுன், சென்னை நங்கநல்லூரில், சாலையில் சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் 9 சவரன் நகையை பறித்துச் சென்ற இருவரில் ஒருவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார். நேற்று மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர்.