ஏ.டி.எம். இயந்திரத்தில் 4 லட்சம் ரூபாய் திருடிய பெண் கைது..!

132

புதுச்சேரியில் திறந்திருந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடிய பெண்ணை சிசிடிவி கேமிரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அங்கு நள்ளிரவில் வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்கு திறந்து கிடந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் உருளையன்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏ.டி.எம். மையத்தில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை தேடி வந்தனர்.

சுமார் 2 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த சித்ரா என்பதும், தனியார் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.