அமமுகவைச் சிக்க வைக்கச் சூழ்ச்சி நடைபெற்றுள்ளது !

104

அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான கட்டடத்தில் பணத்தை வைத்து அமமுகவைச் சிக்க வைக்கச் சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாகத் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தனியார் வணிக வளாகக் கட்டடத்தில் அமமுக ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மாடியில் உள்ள ஓர் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஒருகோடியே 48லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அமமுக நிர்வாகிகள் 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 150பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுக பிரமுகருக்குச் சொந்தமான கட்டடத்தில் பணத்தை வைத்து அமமுகவைச் சிக்கவைக்கச் சூழ்ச்சி நடைபெற்றுள்ளதாகவும், இது தோல்வி பயத்தால் அதிமுக செய்யும் சதியாகும் எனவும் தெரிவித்தார்.