தமிழர்களை சுட்டக் கொல்லும் ஆந்திராவை ஆதரிக்க முடியாது – தம்பித்துரை திட்டவட்டம் ..!

641

அப்பாவி தமிழர்களை சுட்டக் கொல்லும் ஆந்திராவை ஆதரிக்க முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திர மாநிலத்திற்கு, அதிமுக எப்போதும் துணை போகாது என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் கூலித் தொழிலாளர்கள், எந்தவித விசாரணையும் இல்லாமல் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லும் சந்திரபாபு நாயுடு அரசை ஆதரிக்க அதிமுகவை மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்துவது ஏன் என்றும் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பிறகு, இதுவரை 10 ஆயிரத்து 144 தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஸ்டாலின் அறிய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்படிப்பட்ட விரோத போக்கு கொண்ட ஆந்திர அரசியல் கட்சிகளின் சதுரங்க விளையாட்டிற்குள், அதிமுகவை நுழைத்து, தமிழர்களுக்கு ஒரு வரலாற்று அநீதியை மீண்டும் இழைக்க துடிக்கிறார் மு.க.ஸ்டாலின் என்று தம்பிதுரை விமர்சித்துள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைப் போரில் பல்லாயிரக் கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டபோது, தங்கள் பதவி சுகத்திற்காக அமைதி காத்த திமுக தலைவரின் செயல் தலைவர் தானே நீங்கள் என்று ஸ்டாலினை அவர் சாடியுள்ளார்.